​குடிநீர் விநியோகம்

நகர்ப்புற உள்ளாட்சிகளில் அனைத்து குடியிருப்புகளுக்கும் பாதுகாக்கப்பட்ட தரமான குடிநீர் வழங்குதல் அரசின் முதன்மையான நோக்கமாகும். மேலும் மத்திய பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் அமைப்பு (CPHEEO) குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கினை எய்தும் வகையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த உறுதி பூண்டுள்ளது.

இச்சவாலினை நிறைவேற்றும் முகமாக அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னைப் பெருநகர குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் குடிநீர்த் திட்டங்களை செயல்படுத்திடும் நிலையில் மாநகராட்சிகள் (சென்னை நீங்கலாக) மற்றும் நகராட்சிகள் தாங்களாகவே குடிநீர்த் திட்டங்களை செயல்படுத்திடத் துவங்கியுள்ளன.

பல்வேறு நிதி நிறுவனங்களின் வாயிலாக நகர்ப்புற உள்ளாட்சிகளில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள குடிநீர்த் திட்டப் பணிகள் பின்வருமாறு:-​​

water supply table1.png

ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2011-12-ஆம் ஆண்டில், 47 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு ரூ.58.80 கோடியும், 2012-13ம் ஆண்டில் 37 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு ரூ.83.81 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் பல்வேறு நிலையில் உள்ளன

திறனான குடிநீர் மேலாண்மை அமைப்பு

மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் சீரான, சரிசமமான குடிநீர் விநியோகம் மக்களுக்கு கிடைத்திட அரசு முன்னுரிமை வழங்கியுள்ளது. இதற்கு கீழ்காணும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன

  • திறனற்ற மோட்டார்களை மாற்றியமைப்பதன் வாயிலாக நீர் உந்து அமைப்பிலுள்ள செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல்.
    • ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் 2012-13ல் 26 நகராட்சிகள் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிக்கு ரூ.46.59 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் 2012-13ல் இயக்குதல் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதியின் கீழ் 3 மாநகராட்சிகளுக்கு ரூ.4.30 கோடி அனுமதிக்கப் பட்டுள்ளது.
  • சீராக குடிநீர் விநியோகம் வழங்கிட பகிர்மான கட்டமைப்பினை சீராக்குதல்.
    • 53 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பயன்பாட்டில் உள்ள குடிநீர் திட்டங்களை சீரமைக்கவும், மேம்படுத்தவும் திட்ட தயாரிப்பு நிதி மூலம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகின்றது.
  • குடிநீர் விநியோகம் மேற்பார்வைக் கட்டுப்பாடு மற்றும் தகவல் கையக அமைப்பு (SCADA) நிறுவுதல், குடிநீர் திட்டத்தில் குடிநீர் பெறும் அளவு, மோட்டார் மற்றும் பம்புகளின் செயல்திறன் மற்றும் குடிநீரின் தரத்திற்கான பௌதீக மற்றும் வேதியியல் தன்மைகளை அறியவும் குடிநீர்த் திட்டத்தினை கணினி மூலம் தேவையான பகுதிகளை ஒருங்கிணைத்து விவரங்களைச் சேகரித்துக் கண்காணித்து கட்டுப்படுத்தும் (SCADA) உபகரணங்கள் அமைத்தல்.
    • திருச்சிராப்பள்ளி மற்றும் தூத்துக்குடி மாநகராட்சியில் மேற்கொள்ளபட்டுள்ளது.
மழைநீர் சேகரிப்பு

2001-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முன்னோடித் திட்டமான மழைநீர் சேகரிப்புத் திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட திட்டமாகும். 2001-2006ம் ஆண்டில், தீவிரமாக செயல்படுத்தப்பட்ட இத்திட்டம் நிலத்தடி நீர்மட்டம் உயர மிகப்பெரிய பங்கினை ஆற்றியுள்ளது.

கட்டட அனுமதி வழங்குவதற்கு அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பினை கட்டாயமாக அமைக்க வகை செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்பட்டதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் அளவு குறிப்பிடத்தக்க அளவு உயர்வதற்கு உதவியாக இருந்தது.

இயக்குதல் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதியின் கீழ் 2012-13ல் குடியாத்தம் மற்றும் நாகப்பட்டினம் நகராட்சிகளில் நீர்நிலைகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பினை மேம்பாடு செய்திட ரூ.2.63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

டெல்டா மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் புனரமைப்பு

வறட்சி பாதித்த மாவட்டங்களில் கடும் வறட்சி நிலையினை எதிர்கொள்ளும் வகையில் திருச்சி மாநகராட்சி மற்றும் 18 நகராட்சிகளில் கூடுதலாக ஆழ்துளைக்கிணறு, விசைப்பம்பு, லாரி மூலம் குடிநீர் வழங்கல், பிளாஸ்டிக் கொள்கலன் நிறுவுதல், மோட்டார் மாற்றுதல் முதலானவற்றுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் ரூ.12.20 கோடிக்கு அனுமதியளிக்கப்பட்டு பணிகள் அனைத்தும் செயல்பாட்டில் உள்ளன.