​​​​​​தெருவிளக்குகள்

அடிப்படை வசதிகளுள் தெருவிளக்குகள் அமைப்பது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய பொறுப்பாகும்.

மாநிலத்தில் மாநகராட்சிகள் (சென்னை நீங்கலாக) மற்றும் நகராட்சிகளில் 7.25 லட்சம் தெருவிளக்குகள் பராமரிக்கப்படுகின்றன. இவற்றில் மின்கட்டண செலவு மொத்த மின் கட்டண செலவில் 25-30% ஆகும். இது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மிகுந்த நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது. ஆகவே, மின் சிக்கனம் கொண்ட தெருவிளக்குகளை அமைப்பது அவசியமாகிறது.

மின்சக்தித் திறனை மேம்படுத்தவும் பராமரிப்புச் செலவினை குறைக்கவும், ஒரே சீரான நடவடிக்கைகளை எடுப்பதும், அதே நேரத்தில் பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவதும், கார்பன் வெளியீட்டைக் குறைப்பதும் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியமான முன்னுரிமையாகும்.

மேற்கண்ட குறிக்கோள்களை எய்த, கீழ்க்காணும் எரிசக்தி சேமிப்பு நடவடிக்கைகள் உத்தேசிக்கப்பட்டுள்ளன:-

  1. ப்ளோரஸண்ட் குழல் விளக்குகளுக்கு பதிலாக LED விளக்குகள் மற்றும் சூரிய சக்தி LED விளக்குகள் பொருத்துதல்.
  2. தர கட்டுப்பாட்டு குறியீடுகளின்படி ஒவ்வொரு விளக்கு கண்காணிப்பு கட்டமைப்புடன் கூடிய தெரு விளக்குகளை பின்னிரவு நேரங்களில் குறைந்த வெளிச்சத்துடன் ஒளிரச் செய்தல்.
  3. நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அனைத்து தெரு விளக்குகளையும் புவியியல் தகவல் முறை (GIS) மூலம் கணக்கில் கொள்ளுதல், புதிய விளக்குக் கம்பங்களை அமைத்தல் மற்றும் விளக்குகள் பொருத்துதல் குறித்த வழிகாட்டி நெறிமுறைகளை நிர்ணயித்தல்.

இதற்கு முன்னோடியாக 9 மாநகராட்சிகளிலும் தஞ்சாவூர் மற்றும் திருப்பூர் மண்டலத்திற்குட்பட்ட 35 நகராட்சிகளிலும் இத்திட்டம் செயலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்கீழ் 2.85 இலட்சம் மின்குழல் விளக்குகளும் 1.47 இலட்சம் இதர விளக்குகளும் மாற்றியமைக்கப்படுவதன் மூலமாக 25-35% மின் கட்டணம் குறையும்.

இந்த திட்டத்திற்காக ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.111.64 கோடி முறையே 2011-12 மற்றும் 2012-13ஆம் ஆண்டுகளில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்படுத்தபடவுள்ளது