​​​​​​சாலைகள்

சாலைகள் நகர்ப்புற உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு முதுகெலும்பாக திகழ்கின்றன. மோட்டார் வாகனங்கள் போக்குவரத்துள்ள அனைத்து சாலைகளும் சரியாக வடிவமைத்து பொது மக்களுக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்க செய்வது முக்கிய கடமையாகும். அதற்கு ஏற்ற வகையில், குறைந்த செலவில் சாலைகளின் தரத்தினை உயர்த்தி நீண்ட நாட்கள் உழைக்கும் வகையில் அமைக்க வேண்டியது முக்கிய நோக்கமாகும்.

மாநகராட்சிகள் (சென்னை நீங்கலாக) மற்றும் நகராட்சிகளில் உள்ள சாலைகளின் மொத்த நீளம் 21,412.08 கி.மீ. ஆகும். இதில் 4,400.32 கி.மீ. சிமெண்ட் சாலைகளும், 13,255.40 கி.மீ. தார் சாலைகளும், 1,253.64 கி.மீ. கப்பி சாலைகளும், 2,352.74 கி.மீ. மண்சாலைகளாகவும் மீதமுள்ள சாலைகள் 149.98 கி.மீ. பேவர்பிளாக் மற்றும் செதுக்கப்பட்ட கற்களால் ஆன சாலைகளாகவும் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

சாலை பராமரிப்பு மற்றும் குடிநீர் மற்றும் வடிகால் குழாய்கள் பதித்தமையால் சேதமடைந்த சாலைகள் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் சேதமடைந்த சாலைகள் ஆகியவற்றினை பராமரிப்பு செய்வதென்பது நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு பெரும் சவாலாகவே உள்ளது.

நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்புத்திட்டம்

பாதாள சாக்கடைத்திட்டம், குடிநீர் திட்டம் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் சேதமடைந்த சாலைகளை வாகன போக்குவரத்திற்கு ஏற்றதாக குறிப்பிட்ட காலத்திற்குள் சீரமைப்பது அரசின் தலையாய நோக்கம் ஆகும். எனவே, அரசு "நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தை" அறிவித்துள்ளது.

2012-13ஆம் ஆண்டில், பாதாள சாக்கடைத் திட்டம் மற்றும் குடிநீர் வழங்கல் திட்டத்தினை செயல்படுத்துவதால் சாலைகளில் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும் பொருட்டு 4 மாநகராட்சிகளிலும் 21 நகராட்சிகளிலும் ரூ.175 கோடி மானியத்துடன் 486.45 கி.மீ சாலைப் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகின்றது. இந்த திட்டப்பணிகள் 2013-14ஆம் ஆண்டிலும் தொடர்ந்து நடைபெறும்.

ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் (IUDM)

2012-13-ல் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 94 நகர்ப்புற உள்ளாட்சிகளில் 450 கி.மீ. நீளத்திற்கு ரூ.167.17 கோடியில் சாலைப்பணி மேற்கொள்ளப்பட்டது.

சாலைகள் அமைப்பதில் பிளாஸ்டிக் பயன்பாடு

பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுப்புற சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்த அரசு, பிளாஸ்டிக் இல்லாத சுற்றுப்புற சூழ்நிலையை உருவாக்குமாறு வலியுறுத்தி அறிவுறுத்தியதற்கிணங்க பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் கழிவு தொழில் நுட்பத்தின் அடிப்படையில் நீண்டகாலம் நீடிக்கக்கூடிய தரமான சாலைகள் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் அமைக்கப்பட்டு வருகிறது. தேசிய ஊரக வளர்ச்சி திட்ட அறிவுரைகளின்படியும் போதிய வழிகாட்டி நெறிமுறைகள் அனுப்பப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. பிளாஸ்டிக் கழிவினை கூடியவரை பயன்படுத்திட வேண்டும் என்ற அரசின் கொள்கையின் அடிப்​டையில் நகர்ப்புற உள்ளாட்சிகளில், சாலைகள் அமைப்பதில் பிளாஸ்டிக் பயன்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

2012-2013ஆம் ஆண்டில் பிளாஸ்டிக் சாலைகள் அமைப்பதற்கு ரூ.10.00 கோடியினை 23 நகராட்சிகளுக்கும், 3 மாநகராட்சிகளுக்கும் 52.24 கி.மீ. நீளத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பணிகள் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகின்றன. 2013-14ல் 100கிலோ மீட்டர் நீளத்திற்கு பிளாஸ்டிக் கழிவுகளை உபயோகித்து சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து தரம் பிரித்து, எந்திரம் மூலம் துகள்களாக்கும் பணி சுய உதவிக் குழுக்களால் செயல்படுத்தப்படுகிறது. இதுவரையில், 11 மையங்களில் பிளாஸ்டிக்கை துகள்களாக்கும் எந்திரங்கள் ரூ.0.80 கோடியில் நிறுவப்பட்டுள்ளது.

2013-14ல் இதுபோன்று 50 கூடுதல் மையங்கள் நகர்ப்புற உள்ளாட்சிகளில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஒரே சீரான ஒளிரும் சாலைக் குறியீடு அமைத்தல்

சாலைகளுக்கு உரிய போக்குவரத்து குறியீடுகள் மற்றும் குறியீட்டுடன் கூடிய ஒளிரும் பெயர் பலகைகள், உரிய வடிவமைப்புடன் ஒவ்வொரு சாலைகளிலும் உரிய இடங்களில் மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கும் தெளிவாகத் தெரியும் வண்ணம் வைக்கதிட்டமிட்டு, ஒவ்வொரு சாலை மதிப்பீட்டிலும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் தொடர்ந்து அனைத்து சாலைகளிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 5,363 ஒற்றைக் குறியீடுகளும், 945 இரட்டைக் குறியீடுகளும் 369 எண்ணிக்கையில் சாலை விவரங்கள் குறித்த பலகைகள் மாநகராட்சிகள் / நகராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் 2013-14ஆம் ஆண்டிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.