​​
​​​​​​​​​​​வெளி நிறுவன உதவித் திட்டங்கள்
தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் - III (TNUDP - III)

தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டம்-III, உலக வங்கியின் உதவியுடன் ரூ.1,996.40 கோடி மதிப்பீட்டில் கீழ்க்காணும் நோக்கங்களை ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் II-ன் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டது.

 1. உள்ளாட்சி அமைப்புகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு தொடர்ந்து நிதி அளிக்கும் நோக்கத்தோடு தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு நிதியினை (TNUDF) நிதி இடையீட்டாளராக மேம்படுத்துதல்.
 2. தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் II - ன் கீழ் நகர்ப்புறப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களை ஒருங்கிணைத்து நிறுவன மேம்பாடு மற்றும் பணித்திறனை அதிகரித்தல் போன்றவற்றை உறுதி செய்தல்.

இத்திட்டத்தின் கூறுகள் பின்வறுமாறு:

அ) நிறுவன மேம்பாட்டு கூறு
 • நகராட்சிப் பணியாளர்களின் செயல் திறனை மேம்படுத்துதல்
  • உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ரூ.25.88 கோடி மதிப்பீட்டில் 133 பயிற்சி திட்டங்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதில் 73 பயிற்சித் திட்டங்களில், 12625 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும், 6300 தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும், ஆக மொத்தம் 18925 நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
 • தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்ப மேம்பாடு
  • அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மின் ஆளுமைத் திட்டத்தினை செயல்படுத்திட தேவையான கணினி சாதனங்கள் மற்றும் மென்பொருள்கள் வழங்கப் பட்டுள்ளன. மின்னனு ஆளுகையை செயல்படுத்துவதற்காக திட்ட மேலாண்மை அலகு அமைக்கப்பட்டுள்ளது
 • புவியியல் தகவல் தொகுப்பு
  • மூலமாக நிலப்படம் மற்றும் உட்கட்டமைப்பு வரைபடம் தயாரித்து மற்றும் நகராட்சி தகவல் தொகுப்புடன் இணைத்து நகராட்சி வரி வசூலை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக முன்னோடி அடிப்படையில் (Pilot Basis) ரூ.3.92 கோடி செலவில் கோயம்புத்தூர், மதுரை, மற்றும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிகள் மற்றும் இராஜபாளையம், கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய நகராட்சிகளில் இத்திட்டத்தினை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன் செயலாக்கம் முன்னேற்ற நிலையில் உள்ளது.
 • கடன் கண்காணிப்புப் பிரிவு அமைத்தல்
 • திட்டம் தயாரிப்பு வசதிகள்
 • திட்ட மேலாண்மை மற்றும் இயக்க நடைமுறைகளுக்கான செலவு
ஆ) நகர்ப்புற முதலீட்டுக் கூறு
 • நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு கடன்கள் வழங்குதல்
 • நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு மூலதன மான்யம் வழங்குதல்
 • திட்ட மேம்பாட்டிற்கான ஆலோசனைகள் வழங்குதல்

திட்ட தயாரிப்பு நிதி

தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டம்-III உருவான போது உள்ளாட்சி அமைப்புகளில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல், ஒப்பந்தப் படிவம் தயாரித்தல், ஒப்பந்த மேலாண்மை மற்றும் திட்ட மேலாண்மை கலந்தாலோசனை போன்ற தொழில்நுட்ப பணிகளை செயல்படுத்துவதற்கு உதவியாக திட்ட தயாரிப்பு நிதி உருவாக்கப்பட்டது.

நகர்ப்புற முதலீட்டுக் கூறு (TNUDF)

நகர்ப்புற முதலீட்டுக் கூறின் கீழ் 104 திட்டப்பணிகள் ரூ.2,104.35 கோடி மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு, 76 திட்டப் பணிகள் முடிவுற்றுள்ளன. மீதமுள்ள 28 திட்டப்பணிகள் பல்வேறு செயலாக்க நிலையில் உள்ளன.

ஜெர்மன் மேம்பாட்டு வங்கி உதவி பெறும் திட்டம் (KfW)

நகர்ப்புற பகுதிகளில் குடிநீர் வசதி மற்றும் கழிவு நீர் அகற்றும் வசதிகளை ஏற்படுத்துவதன் பொருட்டு ஜெர்மன் வங்கியிடமிருந்து ரூ.500.00 கோடி (யூரோ 77 மில்லியன்) நிதியுதவி பெறப்பட்டுள்ளது. இத்திட்ட செயலாக்க காலம் ஐந்தாண்டுகளாகும். ரூ.500.00கோடி மதிப்பீட்டில் 13 திட்டப்பணிகள் செயல்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அதில் 4 திட்டப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.

ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (JICA) நிதியுதவி பெறும் திட்டங்கள்

நகர்ப்புற பகுதிகளில் குடிநீர் திட்டங்களுக்காக ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையிடமிருந்து ரூ.344.70 கோடி (9,824மில்லியன் ஜப்பான் யென்) நிதியுதவி பெறப்பட்டுள்ளது. இத்திட்ட செயலாக்க காலம் 2008-ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டுகளாகும். இத்திட்ட காலம் மார்ச் 2016 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ரூ.338.71 கோடி மதிப்பீட்டில் 6 திட்டப்பணிகள் செயல்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அவற்றின் செயலாக்கம் பல்வேறு நிலையிலுள்ளது.